வருமானத்திற்கு அதிகமாக சொத்து: பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் ரெய்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி, ஏற்கனவே எஸ்.பி.சி.ஐ.டி பிரிவிலும், 2 ஆண்டுகளாக மாவட்ட எஸ்.பி யின் தனிப்பிரிவு ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தார்.
இவரின் கணவர் சேவியர் பாண்டியன் குமரிமாவட்ட நீதிமன்றங்களின் உதவி குற்றவியல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
தற்போது நாகர்கோவில் பாலசுப்ரமணிய வீதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கண்மணி மற்றும் அவரது கணவர் அதிகமாக லஞ்சம் வாங்குவதாகவும், அதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு கண்மணியின் வீட்டில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையில் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதே போன்று நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிக்கும் காவல் ஆய்வாளர் கண்மணியின் நெருங்கிய தோழி அமுதா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 22 மணி நேரமாக விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் பெண் காவல் ஆய்வாளர் கண்மணி வீட்டில் இருந்து 91 பவுன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 1 கோடி ரூபாய்க்கான டெபாசிட் பாத்திரங்கள், 7 லட்சம் ரூபாய் சீட்டுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதே போன்று பெண் ஆய்வாளரின் நெருங்கிய தோழி அமுதா வீட்டில் இருந்து 23 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததற்கான அத்தாட்சி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனிடையே பெண் ஆய்வாளர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அமுதா வீட்டில் 23.95 லட்சம் கடன் கொடுத்ததற்கான அத்தாட்சி பத்திரங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இது காவல் ஆய்வாளர் கண்மணிக்கு சொந்தமான பணமா அல்லது அமுதாவின் பணமா என்றும் அமுதாவின் பணம் என்றால் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் பெண் காவல் ஆய்வாளர் தனது வருமானத்திற்கு அதிகமாக 171 சதவிகித சொத்துக்கள் சேர்த்து இருப்பது தெரிய வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu