தடுப்பூசி தட்டுப்பாடு - 4 மணிநேரம் காத்திருந்த பொதுமக்கள் சாலை மறியல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 37 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இரண்டு மையங்களில் தடுப்பூசி செலுத்துவதாக அறிவிக்கப்பட்டது,
கடந்த 3 நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி போடும் மையங்களில் பெருமளவில் கூட்டம் காணப்பட்டது, இதனிடையே நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் 500 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 4 மணி நேரமாக சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர், இதனிடையே தடுப்பூசி மையத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் 100 முதல் 150 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் கொடுத்து விட்டு டோக்கன் தீர்ந்து விட்டதாக அறிவித்தனர்.
இதனால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தடுப்பூசி இருப்பு குறித்த முறையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் சரியாக அளவில் டோக்கன் கொடுக்க வேண்டும் பொதுமக்களை ஏமாற்ற கூடாது எனக் கூறினர்.
பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சற்று நேரத்தில் கைகலப்பு அளவிற்கு சென்ற நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், இதன் காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது,
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர், தடுப்பூசி செலுத்த ஆன்லைன் பதிவு முறையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை இருந்து வரும் நிலையில் தடுப்பூசி குறித்த முறையான தகவல் அளிக்காமல் குறைவான அளவில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி விட்டு மீதமுள்ளவற்றை தங்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு அதிகாரிகள் வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதேபோன்று மாவட்டத்தில் குளச்சல், வாவறை, தக்கலை உள்ளிட்ட மையங்களிலும் இதே நிலை நீடித்து வருகின்றது, தடுப்பூசி என்பது கொரோனா பரவலை தடுப்பதற்கு தான் என கூறும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் முறையில்லாத அனுகு முறையால் தடுப்பூசி மையங்கள் மூலம் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இன்று மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு வந்த பொது மக்களில் 70 சதவீத பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu