தற்கொலைக்கு முயன்றவரை வீடு புகுந்து தாக்கிய கந்துவட்டிக் கும்பல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கடை தெரு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் ரகுமான், ஸ்டுடியோ வைத்து நடத்தி வரும் இவர் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து கொடுக்கும் பணியையும் செய்து வந்தார்,
தனது ஸ்டுடியோ தொழிலை விரிவுபடுத்த நினைத்த ரியாஸ் ரகுமானிடம் வெளிநாட்டில் பணிபுரிந்து தனது சொந்த ஊரான அஞ்சுகிராமம் அருகே உள்ள பண்ணையூர் திரும்பிய ஷரப்புதீன் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்த பணம் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வைத்து தொழிலை விரிவுபடுத்தி கொள்ளுமாறும் கூறி உள்ளார்.
அதற்காக குறைந்த வட்டியாக மாதம் மூன்றாயிரம் தனக்கு தரிமாறும் கூறியதோடு 100 ரூபாய்க்கான வெற்று பத்திரம் மற்றும் வங்கி காசோலையை வாங்கி கொண்டு பணம் கொடுத்துள்ளார், தனது உறவினர் தானே என நினைத்து ஷரப்புதீனிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் வாங்கிய ரியாஸ் ரகுமான் அந்த பணத்தை தனது தொழிலுக்காக செலவு செய்த பின்னர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தான் மூன்றாயிரம் வட்டி என கூறிய ஷரப்புதீன் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மாதா மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் வட்டியாக பெற்று உள்ளார்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வட்டி செலுத்தி வந்த ரியாஸ் ரகுமான் கொரோனா ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் கடந்த 5 மாதமாக வட்டி செலுத்த வில்லை என தெரிகிறது, இதனால் ஆத்திரமடைந்த ஷரப்புதீன் போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரியாஸ் ரகுமான் கடந்த மாதம் 31ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அவரது நண்பர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு ஏழு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய ரியாஸ் ரகுமானை மீண்டும் தொடர்ந்து தொடர்பு கொண்டு ஷரப்புதீன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ரியாஸ் ரகுமான் வீட்டிற்கு சென்ற ஷரப்புதீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரியாஸ் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக திட்டியதோடு உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரியாஸ் ரகுமானை தாக்கி தான் கையோடு கொண்டு வந்த கத்தியால் தாக்கியதாகவும் தெரிகிறது,
இதில் கழுத்து கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்ட ரியாஸ் ரகுமான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த ரியாஸ் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் கந்து வட்டியால் தன்னை தற்கொலைக்கு வரை தூண்டியதோடு, உயிர் பிழைத்து வந்த தன்னை மீண்டும் தொடர்ந்து மிரட்டு வருவதோடு தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுக்கும் கந்துவட்டிக்காரர் ஷரப்புதீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணீர்மல்க புகார் மனு அளித்தார்.
கந்துவட்டி கொடுமையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில் மீண்டும் தலைதூக்கும் கந்து வட்டி கொடுமைக்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu