குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு வேறு நபர்கள் தீக்குளிக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகததில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கசமுத்து பாண்டியன் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு பிரச்சனையை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவரை சமாதானப்படுத்தினர்.
கசமுத்து பாண்டியனின் குடும்பச் சொத்தை சகோதரர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளதாகவும் தனக்கும் உரிமை கொண்ட சொத்தை மீட்டுத்தர கேட்டு பதிவுத்துறை, வருவாய்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த முடிவுக்கு வந்ததாக போலீசாரிடம் கசமுத்து பாண்டியன் கூறினார்.
இதேபோல் ஓய்வு பெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவேல் என்பவர் தனக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மனவேதனையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீக்குளிக்க முயற்சித்தார்.
அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரது கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவங்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களில் இது நான்காவது சம்பவங்களாகும்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவ்வப்போது மனு அளிக்க வரும் நபர்கள் தங்களுக்கு நியாயம் கேட்டு வேதனையின் உச்ச கட்டத்தில் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற வாசல்கள் மூடப்பட்டு ஒரு வாசல் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது, மேலும் அலுவலக வளாகத்திற்குள் வரும் நபர்கள் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும் பரிசோதனையை கடந்து மண்ணெண்ணெய் உடன் வரும் நபர்கள் அலுவலக வளாகத்திற்குள் தீக்குளிக்க முயற்சிப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே நாளில் இரு வேறு நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu