மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

மகளிர் காவல் நிலையத்தில்  வாலிபர் தற்கொலை முயற்சி
X

அனைத்து மகளிர் காவல் நிலையம், நாகர்கோவில் 

வயது முதிர்ச்சி அடையாத காதலர்களை பிரித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவரும், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய மாணவியின் தாயார் இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்நிலைய போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் பிடித்தனர். இருவரையும் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மாணவி தனது காதலனுடன் தான் செல்வேன் என்று உறுதியாக கூறியதாக தெரிகிறது.

ஆனால், இருவருக்கும் 17 வயதே ஆவதால் இருவரையும் சேர்த்து அனுப்ப முடியாது என்று தெரிவித்த போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவும் வாலிபரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லவும் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

இதனிடையே கழிவறைக்கு சென்ற வாலிபர் அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த வாலிபரை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!