கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
“குமரியின் தந்தை” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மார்ஷல் ஏ.நேசமணி. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட, தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த, தமிழகத்தின் பூர்வீகப் பகுதியான, பீருமேடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, தேவிக்குளம் ஆகியவை இருந்தன.
இப்பகுதி மக்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் சில ஆதிக்க சக்தியின் அடக்குமுறையால் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று விரும்பினர்.
இவர்களின் நிலையறிந்து தியாகி மார்ஷல் நேசமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுக்காக்கள், செங்கோட்டையில் பாதி தாலுக்கா தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. இதுவே இன்று தமிழகத்தின் எல்லையாக வரலாற்றில் சிறந்து விளங்குகிறது.
முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. இதனை ஆண்ட மன்னர்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களை 2-ம் தர குடிமக்களாக கருதினர். சாதிய பாகுபாடுகள் தலை தூக்கி நின்றது.
பெண்கள் மார்பு சேலை அணியவும், கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டனர். இதற்காக போராடியவர்கள் கொலைக்களம் அனுப்பப்பட்டனர். சமூக நீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்காக தொடங்கிய போராட்டம் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டமாக வலுப்பெற்றது.
இதில் அய்யா வைகுண்டசாமி, நாராயணகுரு, குமரி தந்தை மார்ஷல் நேசமணி போன்றோர் குறிப்பிட தகுந்தவர்கள். இம்மாவட்ட மக்கள் முன்னேற வேண்டுமென்று போராடியவர்கள். இவர்களை போல குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம். வில்லியம், டி.டி. டானியல், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரம் பிள்ளை, சிவதாணு பிள்ளை, ராமசாமி பிள்ளை உள்பட இன்னும் பலர் இப்போராட்டத்திற்கு துணை நின்றனர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். சமூக நீதி காக்க புறப்பட்ட வீரர்கள் கன்னியாகுமரியை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பினர். அவர்களை நசுக்க திருவிதாங்கூர் அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. போராட்ட வீரர்கள் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்கள்.
1954-ம் ஆண்டு இப்போராட்டத்தை முன்னெடுத்த நேசமணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனால் ஏற்பட்ட ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத அரசு 1954-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி நேசமணி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.
அதன் பிறகு நடந்த பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 9 தாலுகாக்களில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் மற்றும் செங்கோட்டையில் பாதி பகுதியும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதில் செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் உதயமாக காரணமாக இருந்த தியாகிகள் மற்றும் முன்னணி தலைவர்கள், மார்ஷல் நேசமணி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குமரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu