மார்ச் 8 மகா சிவராத்திரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 8 மகா சிவராத்திரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
X

கோப்புப்படம் 

மகாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரியன்று சிவனை வழிபடும் பழக்கமும், குல தெய்வத்தை வழிபடும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. மகா சிவராத்திரி தினம் நாட்டின் பல பகுதிகளிலும் பல விதமாக கொண்டாடப்படுவதுண்டு. இந்த வழிபாட்டின் ஒரு முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நடைபெறும் ஒரு வழிபாட்டிற்கு சிவாலய ஓட்டம் என்று பெயர். அதாவது இரவு முழுவதும் ஒவ்வொரு சிவாலயமாக நடந்தும், ஓடியும் சென்று வழிபடும் முறை. இந்த வழக்கம் வேறு எங்கும் நடைமுறையில் கிடையாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பன்னிரு சிவாலய ஓட்டம் நடைபெறும் . இதையொட்டி இம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டே பன்னிரு சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் முஞ்சிறை மகாதேவர் கோயில் முன்பிருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை துவங்குவர். கையில் விசிறி, தோளில் விபூதியுடன் கூடிய கைப்பையுடன் காவி உடைதரித்து ‘கோவிந்தா... கோபாலா...’ என பக்திகோஷம் முழங்க பன்னிரு சிவாலயங்களையும் பக்தர்கள் ஓடியே சென்று வழிபடுவர்.

மொத்தம் 108 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த 12 கோயில்களுக்கும் 24 மணி நேரத்துக்குள் சென்று தரிசனம் செய்யும் வகையில் பக்தர்கள் நேர்த்திக் கடன் வழிபாடு மேற்கொள்வர். சிவாலய ஓட்டத்தில் ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள், பெண்கள் என பலதரப்பினரும் பங்கேற்பர்.

சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் மற்றும் பிற வாகனங்களில் சென்றும் பக்தர்கள் இந்த பன்னிரு சிவாலய புனித பயணத்தை மேற்கொள்கின்றனர். இன்று காலை முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் தொடங்குகின்றனர். தொடர்ந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிதாங்கோடு, திருவிடைகோடு, திருபன்னிகோடு, திருநட்டாலம் ஆகிய சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

வரும் மார்ச் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!