இன்று ஐயா வைகுண்டர் அவதார திருவிழா: உள்ளூர் விடுமுறை
பக்தர்கள் அரோகரா, சிவ சிவா என்ற முழக்கங்களுடன் காவி கொடியை கையில் ஏத்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ஆம்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அமைந்துள்ளது ஐயா வைகுண்டரின் தலைமை பதி. தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமி முக்கியமானவர். குறிப்பாக அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடிய பெருமைக்குரியவர். அத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் நிறுவினார். இவரை அப்பகுதி மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐயா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி ஐயா வழி மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வர். இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.
அந்தவகையில் அவரது 191 வது அவதார தின விழாவை ஒட்டி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். நாகர்கோவில் நாகராஜ திடலில் இருந்து பூஜித குருபாலஜனாதிபதி அடிகளார் தலைமையில் அவர்கள் சுவாமிதோப்பு வரையில் ஊர்வலமாக சென்றனர்.
வழி நெடுகிலும் பக்தர்கள் அரோகரா, சிவ சிவா என்ற முழக்கங்களுடன் காவி கொடியை கையில் ஏத்தியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு முன்பாக கோலாட்டம் உள்ளட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் ஐயா வைகுண்டர் அவதார பதியில் அவதார விழா நடைப்பெற்றது. அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உயர்த்தல், அவையம் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து அவதார தின விழா பணிவிடையும், அன்னதர்மமும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யாவழி பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். ஐயா வைகுண்டரின் அவதார தினத்தை ஒட்டி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu