கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
X

கண் பார்வை இழந்த தாெழிலாளி வினுகுமாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவச வீட்டிற்கான சாவியை வழங்கினர்.

குமரியில் கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளிக்கு இலவச வீட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் வினுகுமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இவரின் கண்பார்வை பறிபோய் உள்ளது.

இதனால் அவரால் வேலைக்கு ஏதும் செல்ல முடியாமல் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார், மேலும் இவர் தங்கி இருந்த வீடும் இடிந்து பாதுகாப்பற்ற முறையில் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் இலவச வீட்டிற்கு வேண்டி அரசிடம் பலமுறை மனு செய்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க முன்சிறை ஒன்றிய இளைஞரணி தலைவர் பிபின்ராஜிடம் உதவி கோரியுள்ளார். அவரும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மற்றும் சக நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் சிறுக சிறுக நிதி திரட்டி வினுகுமாருக்கு புதிய வீடு ஒன்றை கட்டி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அதன்படி கடந்த ஒரு வருடமாக பணி நடந்து வந்த நிலையில் நான்கு லட்சம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு அழகான வீட்டை தளபதி இல்லம் என்ற பெயரில் கட்டி முடித்து வினுகுமாரின் குடும்பத்தாரிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து, திறப்புவிழாவை நடத்தி வீட்டின் சாவியை வினுகுமாரிடம் கொடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!