வருவாய் இழப்புக்கு காரணமான கடந்த கால ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர்
பால்வளத்துறை அமைச்சர் நாசர்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்கள் சென்று அங்கு நடைபெறும் விற்பனை, விலை விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் ஆவின் பாலுக்கு விலை குறைப்பு செய்ததை தொடர்ந்து குறைக்கப்பட்ட விலையில் தான் விற்பனை நடைபெறுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வாடிக்கையாளர்களிடம் பால் என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்பதை கேட்டறிந்த தோடு, பாலகங்களில் விற்பனையாகும் பாலின் அளவு உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் பால் வினியோகப் பணிகள் பதப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்ட தோடு கொள்முதல் மற்றும் விற்பனை விபரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா சங்கிலி தொடரை அறுத்து எறிவதற்காக தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரும் பணியாற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு முறையாக பால் மற்றும் காய்கறி போன்றவை கிடைக்கிறதா என தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பால் உற்பத்தி 36 லட்சம் லிட்டரில் இருந்து 39 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளதோடு, விற்பனையும் மூன்று லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பால் விலை குறைந்த பின்னரும் அதிக விலைக்கு விற்பதாக 13 கடைகள் சீல் வைக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாலை அதிக விலைக்கு விற்றால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.ஆவின் பால் பண்ணையில் வருமான இழப்பை ஏதேனும் அதிகாரிகள் ஏற்படுத்தி இருந்தால் கண்டிப்பாக பழைய ஆவணங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu