கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட 17 லட்சம் பேர்...

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட 17 லட்சம் பேர்...
X

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம். (கோப்பு படம்).

கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரையில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்கு வந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது உண்டு.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் பகுதிக்குள் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயரத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பது வழக்கம். மேலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்வது உண்டு.

இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் மூலம் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிவு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவன பதிவேட்டில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 24 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 73 ஆயிரத்து 700 பேரும், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 41,000 பேரும் பார்வையிட்டு உள்ளனர். மேலும், மே மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும், ஜூலை மாதம் ஒரு லட்சத்து 19000 பேரும், ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேரும் பார்வையிட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், அக்டோபர் மாதம் 2 லட்சத்து 11000 பேரும், நவம்பர் மாதம் 2 லட்சத்து 9000 பேரும், டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பெரும் படகில் பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 17 லட்சம் பேர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா