மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்  பணியிடை நீக்கம்
X

காட்சி படம் 

நாகர்கோவிலில், மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஆராட்டு ரோட்டில் சென்றபோது திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர் எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்பு அருகே சென்றபோது சாலை ஓரம் இருந்த கழிவுநீர் ஓடையில் கவிழும் நிலை ஏற்பட்டது.

உடனே பேருந்தை நிறுத்தும்படி பயணிகள் கூச்சலிட்டனர். அதைத்தொடர்ந்து பேருந்தை டிரைவர் நிறுத்தினார். அப்போது தான் ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. உடனே பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இதுபற்றி வடசேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், புளிக்கோடு பகுதியை சேர்ந்த பெனட் என்பதும், மது போதையில் பேருந்தை ஓட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து பெனட் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பேருந்து ஓட்டுநர் பெனட் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை போக்குவரத்துக் கழக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!