பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பணியை திறம்பட செய்ததோடு படிப்பின் அவசியம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டி தேர்வில் சாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர சைக்கிள் பயிற்சி, மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று உடல் வலிமை, மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
இந்தநிலையில் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவர் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றியுள்ளார். இந்த நூலகத்திற்கு அவருடைய தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
மேலும், இந்த நூலகத்தை தன்னுடைய தாயார் ரெத்தினம்மாளை வைத்து திறக்கவும் ஏற்பாடு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தை பயன்படுத்துவதற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார்.
இது தவிர இந்த நூலகத்தில் டிஎன்.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ், நீட், வங்கி தேர்வு, மத்திய, மாநில அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் உள்ளிட்ட பல புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
இதுதொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறுகையில், மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும். தற்போது உள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழி உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. அந்த ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் பயன்பெறும்.
நான் இந்த வீட்டில் இருந்து படித்து தான் பதவிக்கு வந்தேன். அதே போன்று இந்த பகுதி இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க இந்த நூலகம் வழிகாட்டியாக இருக்கும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu