சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தொடக்கி வைத்த மாவட்ட எஸ்பி

சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு  ஸ்டிக்கர் ஒட்டி தொடக்கி வைத்த  மாவட்ட எஸ்பி
X
குமரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய வழி குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதாவது ஸ்மார்ட் போன்( Smart Phone ) பயன்படுத்தும் போது முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சாதாரண அழைப்புகள், வீடியோ அழைப்புகள், மேட்ரிமோனி தொடர்பான அழைப்புகள் தொடங்கி இணையதள குற்றவாளிகளின் நயமான பேச்சுக்களை நம்பி அவர்கள் கூறும் வங்கிக் கணக்குகளில் பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாந்து விடுகின்றனர். சமீப காலமாக நடைபெற்று வரும் இணையதள குற்றங்களை பட்டியலிட்டு ஆராயும் போது அத்தகைய குற்றங்களில் பெரும்பாலும் சாதாரண உழைக்கும் மக்களையும், அவசர கதியில் இயங்கும் மக்களையும் குறிவைத்து நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

இதனை கருத்தில் கொண்டு இணைய தள குற்றங்களின் மூலம் தங்கள் பணத்தை இழந்து விடாமல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள் கூடும் இடங்களான நியாய விலைக்கடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள். வங்கிகள், ATM மையங்கள், தபால் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் (Super Markets) மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்பு ஏற்படுத்தபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இணையதள விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ATM மையங்கள், வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தபால் அலுவலகங்கள், நியாயவிலைக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (Super market) மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டி அந்தப் பகுதி காவல் நிலையம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், சைபர் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story