மாயமான லாரி 4 ஆண்டுகளுக்கு பின் மீட்பு - பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது

மாயமான லாரி 4 ஆண்டுகளுக்கு பின் மீட்பு - பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது
X
குமரியில் மாயமான லாரி 4 ஆண்டுகளுக்கு பின் மீட்க்கப்பட்ட நிலையில், பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன், சொந்தமாக லாரி வாங்கி அதனை வாடகைக்கு ஒட்டி வந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தும்பு ஆலையில் பாரம் ஏற்றுவதற்காக லாரியை நிறுத்தி வைத்து இருந்தார்.

இதனிடையே இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்றனர், இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லாரி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து லாரியை தேடி வந்தனர்.

இந்நிலையில் மாயமான லாரி நாகர்கோவில் அருகே மறைவான இடத்தில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 17 ஆம் தேதி சம்பவ இடம் சென்ற ராஜாக்கமங்கலம் போலீசார் லாரியை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மீட்கப்பட்ட லாரியின் பதிவு எண்ணும் மாயமான லாரியின் பதிவு எண்ணும் வேறு வேறாக இருந்த நிலையில் மீட்கப்பட்ட லாரியின் எண்ணிற்க்கு உரிய அனைத்து ஆவணங்களும் காணப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்த காவல்துறையினர், லாரியின் ஆவணங்கள் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஆவணங்களை அனுப்பினர்.

இதனிடையே லாரியை கைப்பற்றி பல நாட்களாகியும் அதன் ஆவணங்களை சரிபார்த்து அது மாயமான லாரியா இல்லையா என்பது குறித்த பதில் போலீசாரிடம் இருந்து இல்லாததாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததாலும் சந்தேகம் அடைந்த லாரி உரிமையாளர் தரப்பிலிருந்து காவல்துறை உயரதிகாரிகள் இச்சம்பவத்தில் தலையிட்டு உண்மை சம்பவத்தை வெளிக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்

இந்நிலையில் மீட்கப்பட்ட லாரி காணாமல் போன லாரிதான் என்றும் அதன் பதிவு எண் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் லாரி கடத்தலில் ஈடுபட்டு ஆவணங்களை போலியாக தயார் செய்த பாஜக பிரமுகர் ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன், மணிகண்டன், கண்ணன், ராஜ கோபால் ஆகிய 5 பேரை கைது செய்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story