கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: பால் முகவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: பால் முகவர்கள் போராட்டம்
X

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பால் முகவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து பால் முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று பால் தட்டுப்பாடு நிலவியது. கன்னியாகுமரி ஆவின் அலுவலகத்தின் மூலம் நிறைகொழுப்பு பால், பசும் பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 மிலி பாக்கெட்டுகளிலும், நிலைப்படுத்தப்பட்ட பால் 250 மிலி பாக்கெட்டுகளிலும் என நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பால் கொள்முதல் குறைவின் காரணமாக கடந்த சில தினங்களாக நிகழ்ந்து வரும் ஆவின் பால் தட்டுப்பாடு தற்போது உச்சத்தை தொட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வழக்கமாக விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வழங்க முடியாமல் பால் முகவர்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் மறுநாள் தேவைக்கான பால் பாக்கெட்டுகளுக்குரிய தொகையை முதல் நாளே செலுத்தி ஆர்டர் போட்டு வரும் நிலையில், ஆவின் நிர்வாகம் நாளுக்கு நாள் பால் பாக்கெட்டுகளின் கொள்முதல் அளவை (எண்ணிக்கை) குறைத்து வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மட்டுமே அதுவும் ஏற்கெனவே வாங்கும் அளவில் 40% மட்டுமே ஆர்டர் போட முடியும் என கூறிய அதிகாரிகள், அதற்குரிய தொகையை மட்டுமே செலுத்துமாறு பால் முகவர்களை நிர்ப்பந்தம் செய்தனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பால் முகவர்களோடு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அந்த மாவட்ட ஆவின் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆவின் பொது மேலாளர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிறைகொழுப்பு பால் மற்றும் பசும் பால் பாக்கெட்டுகளை தவிர்த்து இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை மட்டும் தேவையான அளவிற்கு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அனைத்து வகையான பாலினையும் தேவையான அளவு உற்பத்தி செய்து தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மட்டுமே விநியோகம் செய்யப்படுமானால் அதனை புறக்கணிப்போம் என்பதை தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலார்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவையறிந்து நிறைகொழுப்பு, நிலைப்படுத்தப்பட்ட, பசும் பால் பாக்கெட்டுகளின் உற்பத்தியை நிறுத்தி விட்டு ஆவின் நிர்வாகத்திற்கு லாபம் தரும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பாலினை மட்டுமே தருவோம் எனக் கூறுகின்றனர்.

அவ்வாறு கூறும் கன்னியாகுமரி ஆவின் அலுவலக அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான பாலினையும் தேவையான அளவு உற்பத்தி செய்து தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!