எங்கள் வீட்டில் ஆறு ஹால்கள் : தினமும் 150 பேருக்கு சமையல்..!
கண்ணதாசன்
அப்பாவுக்கு பதினான்கு பிள்ளைகள். எல்லோருமே ஒரே வீட்டில் தான் இருந்தோம். எங்கள் வீட்டின் அமைப்பு வித்தியாசமானது. அவ்வளவு பெரிய வீட்டில் கீழ்தளத்தில் வராண்டா, மூன்று ஹால்கள், இரண்டு படுக்கையறைகள், சமையல் கூடம், மாடியிலும் அப்படித்தான். ஆனால், பாத்ரூம் மட்டும் ஏழு இருக்கும்.
நாங்கள் அனைவரும் கீழ் தளத்திலும், மேல்தளத்தில் அப்பாவின் உதவியாளர்கள் பஞ்சு அருணாசலம், மதுரை திருமாறன், அவிநாசி மணி முத்து, தியாகன், புகழேந்தி மற்றும் பாபுராவ், மாணிக்கம், வசந்தன் என்று அனைவரும் தங்கி இருந்தனர்.
பின்னாளில் பிள்ளைகள் வளர வளர இடப் பற்றாக்குறையால், பெரியம்மா பக்கத்துத் தெருவில் சேவுகன் செட்டியார் வீட்டு மாடி போர்சனுக்கு குடி போய் விட்டார்கள்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த போது வீட்டில் ஒரே கூச்சலும் கும்மாளமாக இருக்கும். வருடா வருடம் நான்கு பேராவது ஃபெயில் ஆவது நிச்சயம். ஃபெயிலான யாரையும் அப்பா திட்டியதே இல்லை. "ஒரே பாடத்தை ரெண்டு வருஷம் படிச்சா மனசுல நல்லா பதியும். இந்த வருஷம் பாஸாயிடு " என்று கூலாக சொல்லுவார்.
என் மகன் ஒன்றாவது வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று நான் அடித்த போது என் தங்கை ரேவதி என்னிடம் "நீ என்னைக்காவது சரியா படிச்சிருக்கியா? அப்பா எப்பவாவது உன்னை அடிச்சாரா? இன்னைக்கு நீ ரெண்டு பட்டம் வாங்கி இருக்க. உன் பையனும் நிச்சயம் படிப்பான்" என்றார்.
யோசித்துப் பார்த்தால் இன்று எங்கள் வீட்டில் இரண்டு வக்கில், ஒரு மருத்துவர், ஒரு பல் மருத்துவர், ஒரு விவசாய பட்டதாரி, ஒரு என்ஜினியர், நான் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவன்.
என் சகோதரர்கள் அனைவரும் பட்டதாரிகள். அண்ணன்கள் காந்தியும், கமாலும் கல்லூரியில் சேர்ந்த போது அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். என் பிள்ளைகளை நான் சரியாக வளர்த்திருக்கிறேன் என்ற பெருமிதம் இருந்தது" இப்போதும் என் மனக் கண்ணில் இருந்து அகலாமல் இருக்கிறது.
வீட்டில் உறவினர்கள், வேலையாட்கள் என்று வீடு நிரம்பி வழியும். தினசரி குறைந்தது ஒரு நேரத்திற்கு ஐம்பது பேருக்கு சமையல் நடக்கும். மூன்று வேளை என்றால் 150 பேருக்காவது சமையல் நடக்கும். இப்போது என் பிள்ளைகளுக்கு அதை சொல்லும் போது, அவர்கள் ஆச்சரியத்துடன் "நிஜமாவா சொல்றீங்க?" என்று கேட்பார்கள்.
பெரிய பெரிய பாத்திரங்களில் காபி, இட்லி, சட்னி, சாம்பார் என்று வைக்கப்பட்டிருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்து சாப்பிடலாம். கேள்வி கேட்பாரே கிடையாது. "யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது" என்பது அம்மாவுக்கு, அப்பா போட்ட கட்டளை. அப்பாவின் மரணத்துக்குப் பிறகும் அம்மாவின் இறுதிக் காலம் வரை அது தொடர்ந்தது. அந்தப் புண்ணியம் தான் இன்று வரை எங்களை காப்பாற்றி கொண்டு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
"என்றென்றும் கண்ணதாசன்" என்ற நூலிலிருந்து "அண்ணாதுரை கண்ணதாசன்" எழுதியது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu