பேருந்து வசதி தேவை என எம்.எல்.ஏ.சுந்தரிடம் கிராம மக்கள் கோரிக்கை
வாலாஜாபாத் அடுத்த வயலூர் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ. சுந்தரிடம் பொதுமக்கள் பேருந்து வசதி கோரிக்கை வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் வட்டம் , காவந்தண்டலம் கிராம ஊராட்சியின் இணை கிராமமான வயலூர் கிராமத்தில் 150 க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்காக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கடந்து காவன்தண்டலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்று வந்தனர்.
இதை பெறுவதற்காக முதியவர்கள் நடைபயணமாக செல்வதும் மழை உள்ளிட்ட நேரங்களில் எடுத்து வந்த பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு அக்கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நகரும் நியாய விலை கடை துவங்கி சில மாதங்களே செயல்பட்டது.
அதன்பின் அங்கு ஒரு சிறு வீட்டில் வைத்து பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் 110 குடும்ப அட்டைகளுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ15.25 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் இன்று இதன் திறப்பு விழா கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்துகொண்டு புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்களிடம் நீங்கள் கூறியது போல் உங்கள் பகுதிக்கு புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டி இன்று திறக்கப்பட்டுள்ளது. வேறு ஏதாவது கோரிக்கை உள்ளதா என குறைகளை கேட்ட போது , அதற்கு பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பேருந்து சேவை தேவை எனவும் ஆபத்து காலங்களில் விரைந்து செல்ல இயலாத நிலையும் , மழை காலங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகும் இதனைப் போக்க அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பேருந்து இந்த வழியாக இயக்கினால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை பணி, மருத்துவமனைக்கு செல்வோருக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என ஒட்டுமொத்த பொதுமக்களும் ஒரு சேர கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்த எம். எல். ஏ. சுந்தர் , விரைவில் இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்து இவ்வழியாக இயக்க பரிசீலனை செய்வதாகவும் , அதற்கு முன் இங்குள்ள சிறு பாலத்தை நீக்கி பேருந்துகள் செல்லும் வகையில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுதந்திர காலத்திற்குப் பின்பும் , இன்றும் பேருந்து செல்லாத கிராமமாக வயலூர் கிராமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிக்குமார் , ஒன்றிய துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வனிதா மகேந்திரன் , ஒன்றிய குழு உறுப்பினர் பரசுராமன் , ஒன்றிய செயலாளர் குமணன் , கிராம ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்ழதிசீனுவாசன் , ஊராட்சி திமுக செயலர் ஓம் சக்திவரதன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu