உத்திரமேரூர் பரனேரி ஏரியில் மதகு உடைந்தது.. 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

உத்திரமேரூர் பரனேரி ஏரியில் மதகு உடைந்தது.. 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…
X

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள பரனேரி இரண்டாம் எண் கொண்ட மதகில் மீண்டும் பழுது ஏற்பட்டது. 

உத்திரமேரூர் அருகே உள்ள பரனேரி ஏரியில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியதால் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 282 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலாஜாபாத் அடுத்த தம்மணூர் கிராம ஊராட்சியில் உள்ள ஏரி மதகு முற்றிலும் உடைந்து ஏரி நீர் முழுவதும் வெளியேறி அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடல் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீதமுள்ள நீரை சேமித்தனர்.

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் கிராமத்தில் பரனேரி என அழைக்கப்படும் மிக பெரிய ஏரியானது சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டும், மூன்று மதகுகளையும் கொண்டு உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலமாக சுமார் 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.

பரனேரி ஏறி முழுவதுமாக நிரம்பியதால் சுமார் 300 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் பயிர் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று பரனேரி ஏரியின் இரண்டாவது மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏரியில் இருந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது.

ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரால் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களில் நீர் சூழ்ந்து உள்ளன. விவசாயிகள் பயிரிட்டுள்ள நாற்றுகள் அழுகும் நிலையில் உள்ளதாலும், பயிரிடப்பட்ட நவரைப் பட்ட பயிர்கள் முழுவதும் நீர் பாசனம் கிடைக்காததால் விவசாயிகள் கடும் மன வேதனைக்குள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஏரியின் மதகுகளை சரி செய்ய வேண்டும் என மூன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித்துறையிடம் வழங்கியும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மேலும், கடந்த ஆண்டு பெய்த வட கிழக்கு பருவ மழையில் 20-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கொண்டு இந்த ஏரியின் மதகுகளை தற்காலிகமாக சரி செய்த நிலையில், தற்போது மழையில் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!