உத்திரமேரூர் ஏரி ரூ 18.8 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணி துவக்கம்
உத்திரமேரூர் ஏரி புனரமைப்பு பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது.
உத்திரமேரூரில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட வைரமேக தடாகம் எனும் உத்திரமேரூர் ஏரி புனரமைப்பு பணிகளை ரூபாய் 18 கோடியே 88 லட்சம் செலவில் எம்.எல்.ஏ. சுந்தர் தொடங்கி வைத்தார்.
ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, தென்னேரி ஏரி, உள்ளிட்டவைகளுக்கு அடுத்ததாக மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி விளங்கி வருகிறது.
இந்த ஏரியானது பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் கி.பி. 715 முதல் 825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரிக்கு வைர மேக தடாகம் என்ற பெயரும் உண்டு.
உத்திரமேரூர்- மானாம்பதி சாலை குறுக்கே செல்வதால் பெரிய ஏரி, சித்தேரி, என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.சுமார் 2720 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியில் 13 மதகுகளும், மூன்று கலங்களும், இரண்டு ஒழுங்கியமும் கொண்டு அமைந்துள்ள இந்த ஏரியின் மூலம் 18 கிராமங்களில் உள்ள சுமார் 5436 ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் காவனூர் புதுச்சேரி, கம்மாளம் பூண்டி, அரசாணிமங்கலம்,அத்தியூர், உள்ளிட்ட ஏரிகளுக்கும் உபரி நீர் சென்று நிரம்பி வருகிறது.
இத்தகைய சிறப்புகள் உடைய இந்த உத்திரமேரூர் ஏரி கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் காரணமாக கரைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து அதனை சீரமைத்து தர வேண்டும் என உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக அரசின் பொதுப்பணி துறையின் மூலம் சுமார் 18 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு சுவர்களை அமைக்கவும், ஏரி கரைகளை புனரமைக்கவும், மதகுகளையும், கலிங்குகளையும், பலப்படுத்தி சீரமைத்து தர உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி உத்திரமேரூர் ஏரி புனரமைப்பு பணிகள் இன்று தொடங்கப்பட்டது.ஏரி புனரமைப்பு பணிகள் தொடக்க விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு ஏரி புனரமைப்பு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
பூமி பூஜை தொடக்க விழாவில் ஒன்றிய செயலாளர் உத்திரமேரூர் ஞானசேகரன், சாலவாக்கம் குமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் நீள்முடியான், இளம் பொறியாளர் மார்க்கண்டன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கிராமப்புற விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu