காஞ்சிபுரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னம் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் அருகே காட்டுப்புத்தூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்திட்டை எனப்படும் ஈமச் சின்ன கற்கள்..
காஞ்சிபுரம் அருகே காட்டுப்புத்தூர் கிராமத்தில் உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் தலைமையில் ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அக்கிராமத்தின் ஒரு பகுதியான கொல்லைமேட்டுப் பகுதியில் புதர்களுக்கிடையே கல்திட்டையை கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து கொற்றவை ஆதன் கூறியது..
கல்திட்டை என்பவை இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இது பொதுவாக 3 அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும் அவற்றின் மீது சமநிலையில் தட்டையான ஒரு பலகை போன்ற கல்லையும் வைத்திருக்கும் ஒரு அமைப்பாகும்.
அந்தக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இறக்க நேரிட்டால் இறந்தவர்களின் உடலை புதைத்து அவ்விடத்தில் அவர் நினைவாகவும், அடையாளத்திற்காகவும், காட்டு விலங்குகள் உடலை சிதைத்து விடாமல் இருக்கவும் பெரிய,பெரிய கற்களை அமைத்து ஈமச்சின்னத்தை அமைத்தனர்.இதற்கு கல்திட்டை என்று பெயர்.
சுருக்கமாகச் சொன்னால் இன்றைய பலரும் சமாதிகள்அமைத்துக் கொண்டிருப்பதற்கு இது தான் துவக்கமாக இருந்திருக்கும் எனக் கருதலாம். இதை இவ்வூர் மக்கள் கோட்டைக்கல் என்கிறார்கள்.
இக்கிராமத்திற்கு அருகில் உள்ள எடமிச்சி கிராமத்தில் 5க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் மற்றும் கல் வட்டங்களையும் பார்த்தோம்.எனவே இதன் மூலம் இங்கு பெருங்கற்காலத்தில் மக்கள் கூட்டம்,கூட்டமாக வாழ்ந்து இருக்கலாம் எனவும் அறிய முடிகிறது.
இதன் காலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம்.இதிலிருந்து இவ்வூரில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.
தமிழக தொல்லியல்துறையும் இது குறித்து ஆய்வுகள் நடத்தி அவற்றை அடையாளப்படுத்தி அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu