உத்திர மேரூர் அருகே பிறந்த குழந்தை பேசியதாக பரவிய தகவலால் பரபரப்பு
பிறந்த ஆண் குழந்தையுடன் தாய் ரேவதி. உடன் ரேவதியின் தாயார்.
உத்திரமேரூர் அருகே களியாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்த பொழுது பிறந்த குழந்தை "நான் வந்து விட்டேன்"என கூறியதாக பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர்.கூலி வேலை செய்து வருகின்றனர். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென ரேவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்துள்ளனர். மருத்துவர் சரண்ராஜ் செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதியை பரிசோதித்து பிரசவம் பார்த்து உள்ளனர்.
பின்னர் காலை 10.15 மணி அளவில் ரேவதிக்கு அழகான 2.900 கிலோ கிராம் எடையுள்ள அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த உடன் திடீரென நான் வந்துட்டேன் என பேசியதாகவும், குழந்தை பேசியதை மருத்துவர், மற்றும் செவிலியர், தூய்மை பணியாளர், தாயின் உறவினர் ஆகியோருக்கும் கேட்டதாக பரபரப்பாக ஒரு தகவல் பரவி வருகிறது.
பிறந்த குழந்தை பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்ததாகவும் மேலும் பிரசவ அறை அருகே யாராவது நின்று இருக்கிறார்களா என்று பார்த்தபோது யாரும் இல்லாததும் திடீரென இக்குரல் கேட்டதும் அதிர்ச்சியும் ஆனந்தம் அடைந்ததாகவும், இந்த செய்திைய கேள்விப்பட்டதும் கிராமம் முழுவதும் உள்ள ரேவதியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் ஆச்சரியத்துடன் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்து சென்றுள்ளனர்.
பிறந்த குழந்தை பேசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புராண காலத்தில் தாயின் வயிற்றில் கர்ப்பத்தின் போது கதைகளை கேட்டு செயல் பட்ட பிரகலாதன், மற்றும் அபிமன்யுவை போல நவீன காலத்தில் குழந்தை பேசியுள்ளது புராண காலத்தை நினைவுப்படுத்தி உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர் கூறுகையில் தனக்கும் அந்த குரல் கேட்டதாக முதலில் கூறி உள்ளார். இதுகுறித்து உரிய முறையில் செய்தியாளர்கள் பேட்டியளிக்க கேட்டபோது , மருத்துவ இணை இயக்குனரை தொடர்பு கொண்டு பேசிய பின் இதனை தவிர்த்து உள்ளார். இதேபோல் செவிலியரும் அதிகாரிகளை மீறி தன்னால் பேட்டி அளிக்க இயலாது என தெரிவித்து விட்டார். இதன் காரணமாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட முடியாத நிலையில் தற்போது வரை உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu