82ஆண்டுகளுக்கு பின் கிராம வீதிகளில் வலம் வந்த தேர்: அமைச்சர்கள் துவக்கை வைப்பு
82 ஆண்டுகளுக்கு பின் கிராம வீதிகளில் வலம் வந்த தேர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்திலுள்ள சீட்டணஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு சிவகாமி சுந்தரி சமேத உடனுறை அருள்மிகு காளீஸ்வரி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கடந்த 1940 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்திருக்கோயிலில் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கிராம பொதுமக்கள் மற்றும் தனிநபர் ஒருவரின் நன்கொடையால் சுமார் 32 அடி உயரமுள்ள மரத்தேர் 60 லட்ச ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது. இன்று அதற்கான வெள்ளோட்டம் மற்றும் திருத்தேர் கும்பாபிஷேக நிகழ்வு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இரண்டு கால ஹோம பூஜைகள் பின் இன்று காலை பூரணஹீதி நடைபெற்ற பின் கலச புறப்பாடு செய்யப்பட்டு திருத்தேர் மீது கலச புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன்பின் தேரோட்டம் வெள்ளோட்டம் நிகழ்ச்சி கிராம வீதிகளில் நடைபெற சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களில் அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் தேரினை வடம் பிடித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதன்பின் மாட வீதிகள் வழியாக திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்று மீண்டும் திருத்தேர் கோயில் நிலையை அடைந்தது.
இதன்பின் சீட்டணஞ்சேரி கிராமத்தில் நடைபெற்றுவரும் திருக்கோயில் உழவார பணியாளர்களுக்கு சீருடை அளித்து அமைச்சர் ஊக்கப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத் திருக்கோயில்களில் தணிக்கை கணக்கு மற்றும் பொது தகவல்கள் தருவதில் காலதாமதம் ஏற்படுவதை இனிவரும் காலங்களில் கட்டாயம் தவிர்க்கப்படும் எனவும் இதற்கென தானியங்கி செயலி செயல்பட்டு வந்தாலும் அதில் உள்ள சிறு குறைகளை நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை பொருத்தவரையில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் , இந்து சமய திருக்கோயில் திருப்பணிக்கு நன்கொடையாளர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும் , ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார் பற்றாளர்கள் நன்கொடையாளர்கள் மற்றும் எந்த கட்சி உறுப்பினராக இருந்தாலும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின் அவர்களையும் அறங்காவலர் குழுவில் இணைத்து செயல்பட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தேரோட்ட நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஜெயராமன் உள்ளிட்ட செயல் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu