பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சுந்தர்
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி அகத்தியப்பா நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் எம்.எல்.ஏ. சுந்தர்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஆறு முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும் .
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளிலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
திட்டமிட்டத்தின்படியே கணக்கெடுப்பு அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாற்று திறன் படைத்த குழந்தைகள் குறித்தும் இதில் கணக்கெடுக்கப்படுகிறது வரும் ஜனவரி 11ஆம் தேதி 2023 வரை இக்கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் , சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் , கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகள் பற்றி தெரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டது.
அவ்வகையில் உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வயலூர் மற்றும் மானாம்பதி அகத்தியப்பா நகரில் வசிக்கும் நரிக்குறவர் மாணவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கடந்த 15 தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என தெரியவந்தது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் ஆலோசனை மேற்கொண்டு இதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
இதன் அடிப்படையில் இன்று அப்பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் நேரில் சென்று பள்ளிக்கு செல்லாத காரணத்தை கேட்டறிந்தார். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களையும் அழைத்து இது குறித்த விசாரணை மேற்கொண்டார். இதில் அருகில் உள்ள பள்ளிக்கு செல்ல அவ்வழியாக பேருந்துகள் இல்லாததால் குழந்தைகள் நடந்து பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என காரணம் தெரிவித்தனர்.
உடனடியாக இதுகுறித்து உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் பள்ளி நேரத்தில் அவ்வழியாக செல்லும் டி 34ஏ எனும் அரசு பேருந்தினை கூடுதலாக இரண்டு கிலோமீட்டர் தூரம் இயக்கவும் இதுகுறித்து முறையாக அனுமதி பெற தேவையான உதவிகளை மேற்கொள்வதாகவும் அவரிடம் தெரிவித்ததின் பேரில் நாளை முதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவை அனைத்தும் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்றதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நரிக்குறவர் இன மக்களை தற்போது எஸ் டி பிரிவில் மத்திய அரசு இணைத்துள்ளதும், இதற்கு தமிழக அரசு பெரும் உதவி செய்துள்ளதாக தமிழக முதல்வர் கூறி இருந்த நிலையிலும், குழந்தைகளை தொடர்ந்து இடைநில்லாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற உறுதியை பெற்றோர்கள் ஏற்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu