காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து முன்மாதிரி ரேஷன் கடை

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து  முன்மாதிரி ரேஷன் கடை
X

காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள  முன்மாதிரி நியாய விலை கடை. 

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முன்மாதிரி ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது.

தமிழக அரசு உணவு வழங்கல் துறை சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான விலையில்லா அரிசி, கோதுமை , சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை தரமான நிலையில் நியாய விலை கடைகள் மூலம் தமிழக முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இது மட்டும் இல்லாமல் பொங்கல் பண்டிகையின்போது பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

நியாய விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்க வரும் பொது மக்களுக்கு மழை மற்றும் கோடை காலங்களில் பாதுகாப்பாக இருந்து பொருட்களை பெறும் வகையில் கட்டிடங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது புதிய கட்டிடங்கள் பல இடங்களிலும் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசின் உணவு வழங்கல் துறையின் சட்டப்படி 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகள் பிரிக்கப்பட்டு புதிய நியாய விலைகளும் அதிக அளவில் தற்போது தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இவைகள் பகுதி நேர கடைகளாகவும் செயல்பட்டு பொது மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிக தூரம் சென்று பொருட்களை வாங்கி வருவதையும் கருத்தில் கொண்டு புதிய கடைகளும் உருவாகி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக்கின் கோரிக்கை அடிப்படையில் அப்பகுதியில் புதிய நியாய விலை கடை உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரின் 2021- 22 தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 15.78 லட்சம் ஒதுக்கீடு செய்து கடந்த இரண்டு மாதங்களாக பணி நடைபெற்று வருகிறது.

இந்த நியாய விலைக் கடை காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்மாதிரி நியாய விலை கடையாக தற்போது தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை கடையில் மாற்றுத்திறனாளிகள் கூட தன்னிச்சையாக வந்து பொருட்கள் வாங்கும் வகையில் சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கட்டிடத்தில் மழை நீர் சேகரிப்பு வசதி , பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் இடம் மற்றும் வெளிப்புறம் குற்ற செயல்களை கண்காணிக்கும் வகையில் அதி நவீன இரண்டு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

மேலும் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை வசதியும் நவீனமாக அமைக்கப்பட உள்ளது.

நியாய விலைக் கடை முன் அழகான செடிகள் கொண்ட தோட்டம் மற்றும் அப்பகுதி முழுவதும் பேவர் பிளாக் கற்கள் மூலம் பதிக்கப்பட்டு தரமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக அளவில் பொதுமக்கள் நியாய விலை கடைகள் உள்ள பகுதியில் கூடுவதால் நியாய விலை கடை சுவர்களில் வரலாற்று சின்னங்கள், அதன் வரலாறு, திருக்குறள் உள்ளிட்டவைகளும் இடம் பெற உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!