உயர்கல்வி கற்றாலும் போதிய வேலை வாய்ப்பு இல்லை - நரிக்குறவர் இன பட்டதாரிகள் கவலை
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் ஊரக வாழ்வாதார திட்ட இயக்கம் ஆகியவை இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உத்தரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 35 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட திறன் வளர்ப்பு மையம் கலந்துகொண்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வேண்டி தங்களது சுய விவர குறிப்பை கொடுத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர்.
இதில் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை கேட்டு முகாமில் விண்ணப்பித்தனர். இதில் இன்ஜினியரிங், மேலாண்மை , கலை அறிவியல் , விவசாய பட்டதாரிகள் மற்றும் +2முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர்களை கேட்டபோது , எங்கள் நரிக்குறவர்கள் இனத்தில் இந்த தலைமுறையில் தான் கல்வி கற்க ஆரம்பித்தோம். பல இடர்பாடுகளில் நாங்கள் பட்டதாரிகள் ஆகிய நிலையில் எங்களுக்கு வேலைவாய்ப்பு இதுவரை கிட்டவில்லை.
இதைக் காணும் எங்கள் இனத்தவர்கள் கல்வி கற்ற உங்களுக்கே வேலை இல்லை எனக் கூறி தற்போது கல்வி கற்க எங்களது குழந்தைகளை அனுப்ப மறுக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதியை பார்வையிட்டபோது தான் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை கூறினார்.
அதன்பேரில் நாங்கள் கலந்து கொண்டோம். விரைவில் எங்களுக்கு உரிய வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்து மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu