சாலவாக்கம் அருகே அரசு பஸ் - லாரி மோதல்; 2 பெண்கள் பலி
சாலவாக்கம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பஸ் ஒருபகுதி சேதம் அடைந்த நிலையில் , அருகில் விபத்தை ஏற்படுத்திய லாரி.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி சாலவாக்கம். இப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்குவாரி மற்றும் கல் அரவை நிலையங்கள் என 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பல்வேறு கல்குவாரிகள் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளது. இதில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான மூலப் பொருட்கள், சென்னை புறநகர் பகுதி மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளுக்கும், இங்கிருந்து 24 மணி நேரமும் கனரக லாரிகளால் பல்வேறு வழித்தடங்கள் வழியாக எடுத்து செல்லப்படுகிறது.
வாலாஜாபாத் செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் பகுதியில் இருந்து சாலவாக்கம் செல்லும் சாலை பிரிந்து செல்லும் சாலையில் இந்த வாகனங்கள் செல்வதால், சுற்றுச்சூழல் மட்டுமில்லாமல் வாகன விபத்திலும் பொதுமக்கள் சிக்கி உயிரிழந்தும், உடல் உறுப்புகளை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வழித்தடத்தில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களும் சொற்ப எண்ணிக்கையிலே செல்வதால், அப்பகுதி மக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது வழக்கம்.
இந்நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து படூர் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இன்று மாலை 4 மணி அளவில் அரசு பஸ் படூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி, 20 பயணிகளுடன் பயணித்து வந்த நிலையில், சிறுமயிலூர் பகுதியில் நின்ற போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரி பஸ்சின் பக்கவாட்டில் உரசியபடியே சென்றபோது ஏற்பட விபத்தில் அரசு பஸ், தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் , உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வந்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், இதை கண்டதும் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் காவல்துறையினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த நபர்களை, உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறுதியாக பஸ்சை நிலை நிறுத்தியபோது பஸ்சுக்கு கீழே சிக்கி இருந்த இரு பெண்களை மீட்டனர். இவர்களை பரிசோதித்துப் பார்த்ததில், அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
விபத்தில், படூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றும் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புனிதா (51) என்பதும், மற்றொருவர் காஞ்சிபுரம் நகரில் வசித்து வரும் ரதி (21) என்பதும் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து சாலவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் நீண்ட நாட்களாகவே லாரி போக்குவரத்தை கட்டுப்படுத்த கோரி, பல்வேறு சாலை மறியல்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் கோரிக்கை முன் வைத்தும் இதை முறைப்படுத்த இயலாத நிலை உருவாகியது. இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu