கல்குவாரி பாதைக்காக போலி தீர்மானம்- சின்னாளம்பட்டி மக்கள் புகார்
கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்க வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னாளம்பாடி ஊராட்சி. இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து கொண்டு வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அக்கிராமத்தில் ஏரிப்பாசனம் நடைபெறும் பகுதியில் கல்குவாரி அமைக்க பணிகளை துவங்கியதும் அதுமட்டுமில்லாமல் அதற்கான பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் அவரிடம் கேட்டபோது, பாதை அமைக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதி அளித்த கடிதத்தை காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் இயற்றப்பட்டதாக கூறப்படும் தீர்மானம் புத்தகத்தில் இடம் பெறவில்லை எனவும், மேற்படி தீர்மானம் உண்மை தன்மை அற்ற தீர்மானம் என்று தெரிய வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் தீர்மானம் அளிக்கப்பட்ட தேதியான 20.05.2020ல் தீர்மானத்தில் கையெழுத்திட்ட மண்டல துணை தாசில்தார் பாஸ்கர் மற்றும் தனி அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அக்காலத்தில் பணி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இதுகுறித்து கிராம பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து புகார் மனு அளித்து, போலியாக தீர்மானம் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கிராமத்திற்கு கல்குவாரி வேண்டாமெனவும், விவசாய நிலங்கள் முற்றிலும் அழியும் சூழ்நிலை ஏற்படுவதால் தடை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
கல்குவாரி பாதைக்காக போலி தீர்மானம் தயார் செய்த அலுவலர்கள் மீது கலெக்டரிடம் சின்னாளம்பட்டி பொதுமக்கள் புகார் அளிக்க வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu