மாநில சாலையை மறித்து திமுக தெருமுனை கூட்டம்: பொதுமக்கள் அவதி

மாநில சாலையை மறித்து திமுக தெருமுனை கூட்டம்: பொதுமக்கள் அவதி
X

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மாகரல் கிராமத்தில் சாலையை மறித்து சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்ற போது

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் , மறைந்த பேராசிரியருமான அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா திமுக சார்பில் தமிழகம் எங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் திமுகவின் அமைச்சர்கள், கழகப் பேச்சாளர்கள் தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வந்தது.

தற்போது நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்கள் ஒன்றிய அளவில் தெருமுனை கூட்டங்களாக நடத்த மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தியதின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கிராமங்கள் தோறும் பேராசிரியரின் செயல்பாடுகளை எடுத்துரைத்தும், திமுக வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும் கிராமங்கள் தோறும் மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெருமுனை கூட்டங்கள் ஒன்றிய அளவில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் குமணன் முன்னிலையில் பல்வேறு கிராமங்களில் நேற்று தெருமுனை கூட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை கூட்டம் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் பிரதான சாலையினை மறித்து இக்கூட்டம் மாலை நடைபெற்றது. இதனால் வாகன போக்குவரத்து கிராம வீதியில் வழியாக திருப்பி விடப்பட்டது. பணிகள் முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் உத்தரமேரூர் நோக்கி செல்லும் அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் மாநில சாலையை வழிமறித்து திமுக கூட்டம் நடத்தியது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற கூட்டங்கள் நடத்த காவல்துறை எவ்வாறு அனுமதி அளித்தது என்பதும், அரசு விழா , பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல், கட்சி சார்பில் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் எளிமையை காட்டும் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , இதுபோன்ற கூட்டங்கள் மாநில சாலையை மறித்து நடைபெறுவதை கண்டுகொள்ளாதது ஏன் என்று மக்கள் தங்களுக்குள்ளேயே கேட்டுவிட்டு செல்கின்றனர்.

இதேபோல் காஞ்சிபுரத்தின் அனைத்து ஓன்றிய பகுதிகளிலும் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கழகப் பேச்சாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் என பலர் தங்களது பகுதிகளில் நடத்தி சிறப்பாக‌ செய்தனர்.

இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இக்கூட்டங்களை நடத்திட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!