சுகாதார கழிவறை வளாக தடுப்பு சுவர் இடிந்து விழுந்து, சிறுவர்கள் படுகாயம்
பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கம்பராஜபுரம் கிராமம். கிராம காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இவர்களுக்கு என 15 ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
தற்போது இது சேதமடைந்த நிலையில் இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் இன்று கம்பராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்த பூவரசு சஞ்சீவி மற்றும் முகேஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சுகாதார வளாக தடுப்பு சுவர் இடிந்து இவர்கள் கால்கள் மேல் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்ததால் சிறுவர்கள் அலறியது கண்டு, அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு வாலாஜாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் பூவரசு மற்றும் சஞ்சீவி ஆகிய இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முகேஷிற்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
சம்பவ இடத்தை காஞ்சிபுரம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் குறித்து மாநகரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சுகாதார வளாகம் கட்டி பல ஆண்டுகள் ஆகியுள்ளதால் சிதிலமடைந்து வருகிறது எனவே இதை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu