ரூ 8.22 கோடி மதிப்பில் 178 இருளர் குடியிருப்பு பணிகள் துவக்கம்

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையான்குளம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள இருளர் குடியிருப்புக்கான பணியானையை பயனாளிக்கு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க ஊராட்சி ஒன்றியம் தோறும், புதிய குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு ரூபாய் 19.37 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டும் பணியினை கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையான்குளம் பகுதியில் சுமார் 45 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நிலம் ஒதுக்கப்பட்டு உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்ட நாவல், குன்னவாக்கம், ரெட்டமங்கலம், நெய்யாடுபாக்கம், காட்டாங்குளம், மலையாங்குளம், சிறுபினையூர், எடையும்புத்தூர் , பொற்பந்தல் , திருமுக்கூடல், கட்டியாம்பந்தல் ஆகிய பதினோரு ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் 178 குடும்பங்களுக்கான வீடு கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டி மற்றும் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் வழங்கினர்.
மலையான்குளம் கிராமத்தில் கட்டப்படும் 178 இருளர் குடியிருப்புகள் ரூபாய் 8 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu