காஞ்சிபுரம் அருகே முன்மாதிரியாக திகழும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
காஞ்சிபுரம் அடுத்த விச்சந்தாங்கல் பகுதியில் அரசு விதிகளுடன் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் தொடங்க வேண்டிய மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் பணியை இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது செப்டம்பர் மாதம் தொடங்க தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவ சாகுபடி 27 ஆயிரத்து 10 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டது. இதன் அறுவடை காலம் தொடங்கியதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டிய விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டியும் , மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார நெல் விலையுடன் சன்னரகத்திற்கு கூடுதலாக ரூபாய் 100 அளிக்கப்பட்டது.
கடந்த 2019- 20ல் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 48,268 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல் 2020 - 2021 இல் 65 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 94 ஆயிரத்து 73 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.கடந்த பருவத்தில் 88 இடங்களில் , ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 889 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த கொள்முதல் நேரங்களில் பருவநிலை காரணமாக பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டு அது மழையில் நனைந்து பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது ஆரம்பிக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தார்ப்பாய் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முகவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , எழிலரசன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 இடங்களில் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முன்மாதிரியாக விச்சந்தாங்கல் விளங்குகிறது. இப்பகுதியில் அனைத்து பயிர் சாகுபடி உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இச்சங்கத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் 300 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 500 ரூபாய் முதல் 2000 வரை பங்கு முதலீடுகளாக செலுத்தி ரூபாய் ஆறு லட்சம் செலவில் கொள்முதல் சேமிப்பு கிடங்கு அமைத்துள்ளனர்.
மேலும் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை தரைப்பகுதியில் இருந்து கற்கள் கொண்டும் சவுக்கு கட்டைகளை மேடையாக்கி உரிய பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
கடந்த நான்கு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையில் இங்கு கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளும் மழையில் நனையாமல் பாதுகாப்பாக குடோனுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இப்பணிகள் அனைத்தையும் முன்னாள் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் இச் சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு அரசு விதிகளுடன் முன்னெடுத்து வருகிறார்.
மேலும் காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விவசாயிகள் இருப்பு வைத்து தேவைப்படும் நேரத்தில் விற்பனை செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட நெல் கிடங்கு போல் , இப்பகுதியில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மேற்கொண்டால் இப்பகுதியை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சேமித்து வைத்து , தேவைப்படும் நேரத்தில் விற்பனை செய்து கொள்ள வழிவகை செய்யும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இதனை மேற்கொள்ள வேண்டும் என இச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu