ஏரி மதகு உடைந்து நீர் வெளியேறியதால் சேதம் அடைந்த விளை நிலங்கள்

ஏரி மதகு உடைந்து நீர் வெளியேறியதால் சேதம் அடைந்த  விளை நிலங்கள்
X
வாலாஜாபாத் அடுத்த தம்பனூர் கிராம ஊராட்சி கடம்பேரி மதகு உடைந்து நீர் வெளியேறியதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வாலாஜாபாத் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடம்பேரி மதகு உடைந்ததால் விளை நிலங்கள் வீணானது.

வாலாஜாபாத் அருகே தம்மனூர் கிராம ஊராட்சி ஏரி மதகு உடைந்து நீர் முழுவதும் வெளியேறி சுமார் 450 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் மூழ்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் , தம்மனூர் கிராம ஊராட்சியில் கடம்பேரி மற்றும் பூதேரி என இரு ஏரிகள் அமைந்துள்ளன. இதில் கடம்பேரி 600 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் பூதேரி மூலம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.ஆட்சியில் குடி மரமரத்து பணி திட்டத்தின் கீழ் ஏரி மதகு செப்பனிடப்பட்டது.இந்நிலையில் கடந்த நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவ மழை டிசம்பர் மாதம் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக ஏரி முழுவதும் நிரம்பி இருந்த நிலையில் விவசாயிகள் தங்களது விவசாய பணியினை துவக்கி ஒரு‌மாதம் ஆன நிலையில் , நேற்று இரவு 8 மணியளவில் திடீரென மதகில் ஓட்டை ஏற்பட்டு நீர் முழுவதும் கசிய தொடங்கிய நிலையில் இரவு பத்து மணிக்கு மேல் மதகு உடைந்து அருவி போல் நீர் வெளியேறி கிராம குடியிருப்பினை ஒட்டி அதிவேகமாக வெளியேறி விவசாய நிலம் முழுவதும் மூழ்கி கடல் போல காட்சி அளிக்கிறது.

இது குறித்து விவசாயி வீரபத்திரன் கூறுகையில் , கடந்த பருவமழையின் ஏரி முழுவதும் நிரம்பி விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பின் மூலம் பயிர் செய்து வந்த நிலையில் நேற்று இரவு ஏரி மதகு முற்றிலும் உடைந்து வெளியேறியதால் நீர் முழுவதும் விவசாய நிலங்களில் சூழ்ந்து திருமுக்கூடல் ஏரியில் நீர் வீணாக கலக்கிறது.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு கிராம பகுதியில் விவசாய பணி மேற்கொள்ள இயலாது எனவும் விவசாய நிலங்களை செப்பனிடவே குறைந்தபட்சம் ஆறு மாத காலமாகும் எனவும், தற்போது விவசாய பணிக்காக ரூ. 25,000 ஏக்கருக்கு செலவு செய்த நிலையில் அனைத்தும் வீணானது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

மேலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் தரம் இல்லாததும் ஏரி மதகு உடைப்புக்கு முக்கிய காரணமாக விளங்கியுள்ளது. சம்பவ பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரி மார்க்கண்டேயன் பார்வையிட்டு நீர் வெளியேறுவதை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உடனடியாக உத்தரவிட்டார்.

மேலும் ஏரி நீர் பாசன சங்க உறுப்பினர்கள் ஏரியினை ஆய்வு செய்து மீதமுள்ள நீரை சேமிக்கும் வகையில் மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக பணிகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். பொதுப்பணித்துறை சார்பில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு பணிகளை மேற்கொள்ள ஜே. சி. பி. இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!