வாலாஜாபாத் அருகே காவந்தண்டலம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
வாலாஜாபாத் அருகே நடந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனை நடைபெற்றது.
இன்றைய காலகட்டத்தில் சுகாதார சீர் கேட்டினால் பல்வேறு விதங்களில் கிருமிகள் பரவி பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் ஏற்படுகிறது. அதற்காக அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.
மேலும் கிராமங்களில் உள்ள முதியோர்களின் உடல் நலத்தை பேணிக் காக்க பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைகள் இணைந்து கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாகவே கடும் பனிப்பொழிவினால் குளிர் வாட்டி வந்த நிலையில் தற்போது காய்ச்சலால் அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமங்களில் உள்ள முதியோர்கள் சிகிச்சை பெறுவதற்கு செல்ல கூட இயலாத நிலையில் வீட்டிலேயே கிராமப்புற வைத்தியங்களை மேற்கொண்டு தங்கள் உடல்நிலையை பேணிக்காத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்றங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற விஷயங்களை முன்னெடுத்து வருவது கிராம மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் , காவாந்தண்டலம் ஊராட்சியில் இன்று அமுதசுரபி லயன்ஸ் சங்கம், பி.எஸ்.பி. மருத்துவமனை மற்றும் கிராம ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சேவை மையக் கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜயகுமார் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் முகாமினை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் துவக்கி வைத்து, கிராம பொது மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் வருகை புரிந்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கிராம பொதுமக்கள் அவர்கள் கூறும் ஆலோசனை கேட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த மருத்துவ முகாமில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளும் மற்றும் அதற்கான மாத்திரைகளும் பெற்றுக் கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் பெண்கள் மருத்துவம் , குழந்தைகள் மருத்துவம், உயர் ரத்த அழுத்தம், கண் காது மூக்கு மற்றும் பொது மருத்துவம் என அனைத்து பிரிவுகளின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
இம்மருத்துவ முகாமில் துணைத் தலைவர் சரஸ்வதிசீனுவாசன், தி.மு.க. நிர்வாகி ஓம்சக்திவரதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் லோகநாதன், அமுதசுரபி லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ஒரகடம் பி.எஸ்.பி. மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu