வாலாஜாபாத் அருகே காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்
வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராம ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்டது அவளூர் கிராமம். கிராம ஊராட்சிக்கு உட்பட்டு இரு சிறு கிராம பகுதிகளும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி என பல்வேறு அரசு சார்ந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மிகப்பெரிய ஊராட்சியான இதில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் பல்வேறு பகுதிகளாக வசித்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் சுமார் 3,000 பேர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு தேவையான குடிநீர் முறையாக வழங்குவதில்லை எனவும், பாலாற்று படுகை அருகில் இருந்தும் குடிநீர் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத்துக்கு தொடர் புகார்கள் தெரிவித்து வந்தனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாலாற்று படுகையில் வெள்ளம் ஏற்பட்டதில் பெருத்த சேதம் கண்ட குழாய் பைப்புகளை மாற்றும் நடைபெற்று குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கிராம ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை தவிர்த்திட பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்ட பின்பும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதை கண்டித்து, இன்று ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து கீழ்பேரமநல்லூர் - வாலாஜாபாத் செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீரை வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாகரல் காவல்துறையினர் வந்து பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனை பாராற்று படுகையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்கள் அடிப்படை வசதி பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu