கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ1.6 கோடி அபேஸ் : 2 சிங்க பெண்கள் கைது

கவரிங் நகைகளை வைத்து கையாடல் செய்த விவகாரத்தில் இரண்டு பெண் அதிகாரிகள் சிக்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் ம.கலைச்செல்வி (58). கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பி.வி.ஜெயஸ்ரீ (51) நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் ஜெ.விஜயகுமார் (47) இவர்கள் 3 பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளைப் பெற்றுக்கொண்டு ரூ.1,64,83,500 நகைக்கடன் வழங்கியுள்ளனர்.
கமிஷன் பெறுவதற்காக கடன்கள் வழங்கியிருந்ததை தொடர்ந்து வங்கி தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப் பதிவாளர் சுவாதி இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்தார். அப் புகாரானது காஞ்சிபுரத்தில் உள்ள வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. முரளியிடம் விசாரணைக்கு வந்தது.
டி.எஸ்.பி.முரளி மற்றும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரூ.1.64 கோடி மோசடி செய்திருப்பதும் உண்மையெனத் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கியின் செயலாளர் ம.கலைச் செல்வி சென்னை புழல் சிறையிலும், நகை மதிப்பீட்டாளர் ஜெ.விஜயகுமார் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளரான பி.வி.ஜெயஸ்ரீ தலைமறைவானதை தொடர்ந்து அவரையும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் வணிக குற்றப்புலானாய்வுப் பிரிவு ஆய்வாளர் தேன்மொழி விரிவான விசாரணையும் நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu