உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டு பழமையான மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு!
1500 ஆண்டு பழமையான ஜேஷ்டா தேவி சிலை
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் அடுத்த வயலூர் கூட்டு சாலைக்கு அருகில் உள்ள உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பு அமைந்துள்ளது. இப் பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:
எங்களது கள ஆய்வில் கிடைத்துள்ள இச்சிலையானது ஒன்றரை அடி மட்டுமே வெளியில் தென்படுகிறது. எஞ்சிய இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி பூமியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது.
இது1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தைச் சார்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை ஆகும். இதை அப்பகுதி மக்கள் எல்லை காத்தாள் என்கிறார்கள்.
மூத்த தேவியின் தலையில் கரண்ட மகுடத்துடனும் கழுத்தில் அணிகலன்களும் தோள்பட்டைகளில் வாகு வளையங்களும் கைகளில் காப்பும் காணப்படுகிறது.
அவரின் வலப்பக்கம் மாட்டுத்தலை கொண்ட அவரதுமகன் மாந்தனும் இடப்பக்கம் அவளது மகளான மாந்தியும் காணப்படுகிறார்கள். மகளின் தலைக்குமேலே காக்கை சின்னம் உள்ளது இது அவரின் சின்னமாகும்.
பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்தவர். இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார் சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது.
பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக போற்றப்பட்டவர் பின்பு மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது.
பழம் பெருமையையும் கடந்தகால வரலாற்றையும் பறைசாற்றும் இந்த சிலையை தமிழகத் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி அதை மண்ணில் இருந்து முழுமையாக எடுத்து உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu