செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் 100 கன அடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரி  நீர் வெளியேற்றம் 100 கன அடியாக குறைப்பு
X

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை குறைவு காரணமாகவும், ஏரியின் நீர்வரத்து குறைந்ததாலும் நீர் வெளியேற்றம் 800 கன அடியில் இருந்து 100 கன அடியாக காலை முதல் குறைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் பல பகுதிகளில் கன மழை பெய்து வந்தது..

கடந்த 17 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 305 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 309 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 191 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 398 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 475 மில்லி மீட்டர் என மொத்தம் 2113 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி உள்ளது.

குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுவட்ட பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள பகுதிகளில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

நீர் வரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏரியின் பாதுகாப்புக் கருதி 100 கன அடி முதல் 800 கன அடி வரை கடந்த 15 தினங்களாக நீர் வெளியேற்றப்பட்டு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியினை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், , சிறு குறு தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்டு தொடர் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீர் வெளியேற்றத்தை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் புதிய காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகி நேற்று முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்த நிலையில் நீர் வெளியேற்றம் தொடர்ந்து 800 கன அடியாக இருந்து வந்தது.

புயல் எச்சரிக்கை தமிழக அரசால் திரும்ப பெறப்பட்டதும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை என்பதும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்ததால் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் தற்போது 800 கன அடியிலிருந்து இருந்து நூறு கன அடியாக காலை 8 மணி முதல் குறைக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

இன்றைய செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் :

நீர் மட்டம் : 81.01 அடி (85.40 அடி)

நீர் இருப்பு: 2508.00 மி. கனஅடி

நீர் வரத்து

நீர்ப்பிடிப்பு :163.00 கன அடி

இணைப்பு கால்வாய் : 0.00

மொத்த வரத்து : 163.00 கனஅடி

வெளியேற்ற விவரங்கள்

ரெகுலேட்டர் மூலம் :804.000 கனஅடி : காலை 8 மணிக்கு பிறகு 100 கனஅடி

பெருநகரம் :108. 00 கனஅடி

ஆவியாதல் :36. 00 கனஅடி

சிப்காட் : 2.00 கனஅடி

நீர்ப்பாசனம் :0.0

மேலும் கடந்த இரண்டு நாட்களாக செம்பரம்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story