பட்டாசு சத்தத்தில் அலார சத்தம் கேட்காது: தப்பு கணக்கு போட்ட திருடன் .
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் படப்பை பகுதியில் அமைந்துள்ள தழுவகொழுந்தீஸ்வர் திருக்கோயில் .
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மேல் படப்பையில் அருள்மிகு காமாட்சி உடனுறை தழுவை கொழுந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கோயில் ஓரு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணி மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திருக்கோவிலுக்கு இரவு நேரத்தில் காவலர்கள் எவரும் பணி புரியவில்லை. இதனால் இத்திருக்கோயிலில் உண்டியல் மற்றும் சிலை பாதுகாப்புக்காக அங்கங்கே சிசிடிவி கேமராக்களும், பாதுகாப்பு அலாரங்களும் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான திருக்கோயில் பூஜைகள் அனைத்தும் இத்திரு கோயிலில் ஆகம விதிப்படி நடைபெற்று வருகிறது.
நேற்று காலை நடைபெறுக்கப்பட்டு மதியம் உச்சி கால பூஜைக்கு பிறகு மீண்டும் மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை ஆலய அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் பூட்டி சென்றனர்.
மேலும் தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்து வந்தனர். இதனால் சற்று முன்னரே அனைவரும் தூங்க சென்றதை அறிந்து, நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அலாரம் சத்தம் கேட்கவே, பொதுமக்கள் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அவசரம் அவசரமாக மதில் சுவர் தாண்டி குதித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கபட்டு பணம் சிதறி கிடந்தது .மேலும் ஒரு செல்போன் கோயில் மதில் சுவருக்கு அருகாமையில் கண்டெடுக்கபட்டது. அதுமட்டுமின்றி திருக்கோயில் முன்பு ஒரு இரு சக்கர வாகனம் கேட்பாராற்று கிடந்தது. திருட்டு சம்பவம் குறித்து உடனடியாக மணிமங்கலம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்த்த பொழுது அதில் நள்ளிரவில் வரும் நபர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களை நோட்டமிட்டு பிறகு கோயிலுக்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதே போல் கடந்த வாரமும் இதே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்ததாகவும், அப்பொழுது அலாரம் சத்தத்தால் பயந்து ஓடிய திருடன் தீபாவளி பட்டாசு சத்தத்தில் அலாரம் சத்தம் மக்களுக்கு கேட்காது என்ற அலட்சிய நம்பிக்கையில் மீண்டும் திருட வந்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து இப்பகுதியில் இதேபோல் கொள்ளை முயற்சிகள் அரங்கேறுவதால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவல்துறையினர் கிடைத்த செல்போனை வைத்து ஆய்வு மேற்கொண்டு அவனுடைய போட்டோ கேலரியிலுள்ள புகைப்படங்களை கொண்டு அதில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக்கொண்டும் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu