வடக்குபட்டு அகழ்வாராய்ச்சி இரண்டாம் கட்ட பணி மீண்டும் துவக்கம்

வடக்குபட்டு அகழ்வாராய்ச்சி இரண்டாம் கட்ட பணி மீண்டும் துவக்கம்
X

அகழ்வாராய்ச்சி பணிகளில் கிடைத்த‌பழங்கால ஆபரணங்கள்.

ஓரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் ஏப்ரலில் துவங்க உள்ளது.

தங்கம் ஆபரண பொருட்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கிடைத்த வடக்குபட்டு கிராம பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி ஏப்ரலில் துவங்க உள்ளதால் அப்பகுதியினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன.

மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் விரிவான 2-ம் கட்ட ஆய்வை நடத்த மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.


முன்னதாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற முதல் கட்ட அகழ்வாழ்வு பணியின் பொழுது, சில நாட்களிலேயே பழங்கால கட்டிட அமைப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. பழைய கற்களை பயன்படுத்தி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதனைத் சுற்றி பள்ளங்கள் தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செம்பு காசு, பானையோடுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டபோது ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் 0.8 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது.முதல்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருட்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மேலும் இந்த பகுதியில் பல பொருட்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்களும், தெரிவித்து வந்த நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற ஏப்ரல் மாதம் இந்த பணிகள் துவங்கி இரண்டு மாதங்கள் வரை இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டம் தீட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!