குன்றத்தூர் அருகே ரூ. 80 கோடி மதிப்பிலான கோவில் நிலம் அதிரடியாக மீட்பு

குன்றத்தூர் அருகே ரூ. 80 கோடி மதிப்பிலான கோவில் நிலம் அதிரடியாக மீட்பு
X

குன்றத்தூர் அடுத்த கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு எல்லை கல் நடப்பட்டது. 

குன்றத்தூர் அருகே ரூ. 80 கோடி மதிப்பிலான கோவில் நிலம் அதிரடியாக அறநிலைய துறையினரால் மீட்கப்பட்டு உள்ளது.

குன்றத்தூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 80 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அதிரடியாக இந்து சமய அறநிலைத்துறையினர் மீட்டு உள்ளனர்.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும் அதிக அளவில் உள்ளது. இதனைக் காண வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திற்கும் அப்பகுதியில் விளைநிலங்களும் சொந்தமாக உள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை பொது அறிவிப்பு வெளியிட்டு ஏலம் முறையில் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருவாய் கொண்டு கோயில் நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறது.


அவ்வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு பல்வேறு இடங்களில் நிலங்கள் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கூவூரில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பரணிபுத்தூர் பகுதியில் அதிகமாக உள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பொது ஏலம் விடப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திருக்கோவிலுக்கு சொந்தமான 10.6 ஏக்கர் நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் விவசாயம் செய்யப்படுவதாக தொடர்ச்சியாக இந்து சமய அறநிலைத்துறைக்கு புகார்கள் வந்தது.


இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி கமிஷனர் லட்சுமி காந்தன் பாரதி கோவில் நிலங்கள் எடுப்பு வட்டாட்சியர் வசந்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட பரணிப்புத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் வசந்தி தலைமையிலான நில அளவீடு குழுவினர் , நில அளவை மேற்கொண்டு இடங்களை உறுதி செய்த பின் அங்கு இந்து சமய அறநிலையத்துறையின் நிலம் எனும் கல் நடும் பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது விவசாயப் பணிகள் நடந்து வருவதால் பயிர்கள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு பின் , உரிய குத்தகை தொகை செலுத்தி விட்டு கோவிலில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியும் , தற்போது அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உள்ளதாகவும் இந்து சமய அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட 10.6 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் என்பது கோடி எனவும் கூறப்படுகிறது.

கடந்த 18 மாதங்களாகவே திருக்கோயில் நிலங்கள் நில அளவீடு செய்வதும் ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்துவதும் என பல கோடி ரூபாய் மதிப்பில் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை கைவசம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அறநிலைய இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai automation in agriculture