மின்கசிவால் திடீரென பற்றியது தீ; ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 12 தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், செம்பரம்பாக்கம் பகுதியில் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் பகுதியாக, தற்போது உள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற மழைக்காலங்களில் அரசு கட்டிடங்களில், மழைநீர் புகாதபடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும், மின்சாரம் இல்லாத நிலையில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார நலத்துறை அறிவுறுத்தியது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. பழைய கட்டிடத்திற்கு பதிலாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் என்பதால், பூமிக்கு அடியில் செல்கிற வகையில் மின்சார வயர் இணைப்பு எடுத்து செல்லப்பட்டு, அருகில் இருந்த மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இன்று, சுங்குவார்சத்திரம் பகுதியில் காலை முதல், அவ்வப்போது கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து செல்லும் மின்வட ஓயர், திடீரென இன்று மதியம் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சார கேபிள் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்து, பட்டாசு போல் வெடிக்க துவங்கியது. இதைக்கண்டு, அங்கிருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
மேலும் கேபிள் அனைத்தும் மளமளவென எரிந்து தீ, மின்கம்பத்தில் பரவியது. மின் கம்பத்தில் உள்ள வயர்கள் எரிந்து, கம்பத்தின் உச்சியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளையும் எரித்தது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு மின் இணைப்பை உடனே துண்டித்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் தொடர் கன மழை பெய்து வரும் இந்த வேளையில், திடீரென மின்கம்பம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த நிலையில் எந்தவித ஆபத்தை உணராமல், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பலர் அலட்சியமாக சென்றது அதிர்ச்சி அளித்தது.
தற்போது ஏற்பட்ட மின் தீ விபத்தால், மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகளும், மருத்துவ பணியாளர்களும் அவதியுற்று வருகின்றனர்.
பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே, அனைத்து மின் கேபிள்களையும் சரி செய்ய வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்திருந்த நிலையில், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற மின்சார விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலைகளை தவிர்க்க, தரமான மின்வட கம்பிகள் புதைத்து மற்றும் அதனை பராமரிக்க புதையுண்ட பகுதிகளில் கால்வாய் போன்ற அமைப்பில் உருவாக்கி சேதம் அடையாத வகையில் அமைக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu