ஸ்ரீபெரும்புதூரில் ராமாநுஜர் 1005 ஆண்டு அவதார திருவிழா தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூரில் ராமாநுஜர் 1005 ஆண்டு அவதார திருவிழா தொடக்கம்
X

 ஸ்ரீபெரும்புதூர் வீதிகளில் தங்கப்பல்லக்கில் வலம் வந்த ஸ்ரீ ராமாநுஜர்.

ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த வைணவ மகான் ராமாநுஜரின் அவதார திருவிழாவில் தங்கப்பல்லக்கில் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், பழமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. வைணவ மகான் ராமாநுஜரின் அவதார ஸ்தலமான இந்த கோயிலில், ராமாநுஜர் தானுகந்த மேனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வருடம் தோறும் சித்தரை பிரமோற்சவ விழாவும், திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ராமாநுஜரின் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இக்கோயிலில் பிரமோற்சவ விழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவின் 7ம் நாளான கடந்த 22ம் தேதி, தேர்த் திருவிழாவும், கடந்த 24ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திங்கள்கிழமை பிரமோற்சவ விழா நிறைவடைந்தது.

இதையடுத்து ராமாநுஜரின் 1005ம் ஆண்டு அவதார திருவிழா இன்று தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த அவதாரதிருவிழாவின் 9ம் நாளான மே மாதம் 4ம் தேதி, தேர்த்திருவிழாவும், மே மாதம் 6ம் தேதி கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ராமாநுஜரின் அவதார திருவிழாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் நிர்வாகமும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தங்கப் பல்லக்கில் பல்வேறு வண்ண மலர்களால் ஆன மாலையை சூடி தேரடி வீதி காந்தி சாலை திருவள்ளூர் சாலை என நகரின் முக்கிய சாலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீராமானுஜர் அருள்பாலித்தார். இதனை ஏராளமானோர் கண்டு தரிசித்து அருள் பெற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி