நிலத் தகராறில் தந்தையை லாரி ஏற்றிக் கொன்ற மகன் கைது
தந்தையை லாரி ஏத்தி கொலை செய்த மகன் ராமச்சந்திரன்.
ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற சம்பவத்தில் காவல்துறையினரால் மகன் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் லாரி ஓட்டுநரான ராமச்சந்திரன் (40) எத்திராஜிடம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு எத்திராஜ் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற ராமச்சந்திரன் தனக்கு உரிய நிலத்தை கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு மீண்டும் தகராறு செய்துள்ளார் .
அப்போது வீட்டில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இதனிடையே இன்று காலை எத்திராஜ் வயலுக்கு செல்ல சங்கராபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராமச்சந்திரன் கனரக லாரியை ஓட்டி வந்து எத்திராஜ் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் உயிரிழந்த கிடந்த எத்திராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரனை ஒரகடம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் பெற்ற தந்தை என்னும் பாராமல் லாரி ஏற்றி கொலை செய்த மகனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் அதிக அளவில் அப்பகுதியில் தற்போது வந்து கொண்டிருப்பதால் நில மதிப்பு அதிகமாகி கொண்டு இருப்பதும் , தற்போது உள்ள காலகட்டத்தில் சிறு மதிப்புள்ள சொத்துக்கு கூட சொந்தம் பாராமல் கொலை செய்வதும் வாடிக்கையாக வருகிறது.
சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தந்தை எனும் பாராமல் லாரி ஏற்றிக் கொன்ற கொடூர செயல் அப்பகுதியில் மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu