சுங்குவார்சத்திரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

சுங்குவார் சத்திரத்தில் இன்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 3.30 ஏக்கர் பரப்பளவில் குளத்தை சுற்றி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியை சேர்ந்த பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குளத்தை சுற்றி உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருவதாலும் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை குளத்தில் பொதுமக்கள் கொட்டி வருவதாலும் குளத்தின் நீர் தற்போது பச்சை நிறமாக மாறி முற்றிலும் மாசடைந்துள்ளது.
குளத்தை தூய்மைப் படுத்தி அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 63 கடைகளும் 34 வீடுகளும் கட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வருவாய்த் துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது
ஆக்கிரமிப்பாளர்கள் வருவாய்த் துறையினரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி வந்த நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 5 ஜே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu