நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டாம்: பொதுமக்கள் கோரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டாம்: பொதுமக்கள் கோரிக்கை
X

குடிநீர் ஆதாரத்தை பாழாக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டாம் என கூறி கோரிக்கை மனு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்த கிராம பொதுமக்கள்

சேந்தமங்கலம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்குவதை கைவிடக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

சேந்தமங்கலம் கிராம ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கினால் சுகாதார சீர்கேடு விளையும் என்பதால் மாவட்ட நிர்வாகம் கைவிடக் கோரி அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது . இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக புலம் எண் 21 ஜல்லிகுழி என்ற புறம்போக்கு நிலத்தில் கருங்கல் பாறை கொண்ட நீர் தேக்கம் பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து சேந்தமங்கலம் , பழைய மற்றும் புதிய காலணி குடியிருப்புகளுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இப்பகுதியில் பொடாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அப்பகுதியில் ஆக்கிரமித்து வீடு மற்றும் குடியிருப்பு கட்டிடங்களிலிருந்து வரும் கழிவுநீரை குடிநீர் ஆதாரமாக விளங்கும் பகுதியில் விடுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் அப்பகுதியில் சில நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சரின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட உள்ளதாக அறிந்ததின் பேரில் இன்று கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து குடிநீர் ஆதாரமாக விளங்கும் அப்பகுதியில் பட்டா வழங்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், இதுகுறித்து விதிமுறைகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு அந்த நபர்களுக்கு வருவாய்த் துறை மூலம் நோட்டீஸ் அளித்தும் தற்போது வரை அங்கேயே வசித்து வருவது நிலை உருவாகியுள்ளது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் அப்பகுதியை குடிமராமரத்து பணி மூலம் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இதனை 2019 ஆம் ஆண்டு சுமார் 6 லட்சம் செலவில் தூர் வாரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு சுமார் 2 லட்சம் எனத் தெரியவந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வருவாய்த்துறை நோட்டீஸ் அளித்தும் அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!