257 பயனாளிகளுக்கு ரூ.50.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெரும்புதூர் ஒன்றியம், துளசாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டத்தினை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளில் , ஒவ்வொரு ஆண்டும் 37 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்ப் செட்கள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு சந்தைப்படுத்துதல், நுண்ணுயிர் பாசன முறையினை மேம்படுத்துதல், கால்நடைகளினுடைய நலன் காத்து, பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய் துறையின் மூலம் புதிய பட்டா மற்றும் பட்டா மாறுதல் செய்து வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர்வாருதல், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் பெயர் மாற்றம் செய்து தருதல் போன்றவை இந்த திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 60 சதவீத சாகுபடி நிலப்பரப்பினை, 75 சதவீதமாக சாகுபடி நிலப்பரப்பாக மாற்றப்பட உள்ளது.
துளசாபுரம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் 257 பயனாளிகளுக்கு ரூ.50.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பழனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu