போலீஸ் என கூறி கூகுள் பே மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
கைது செய்யப்பட்ட இருவர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காரணதாங்கல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த லூட்புர் ரகுமான் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை 8 மணியளவில் பணி முடித்து விட்டு தன்னுடைய அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என கூறி கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்வதாக அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின் வழக்கிலிருந்து விடுவிக்க அவரிடமிருந்து கூகுள் பே மூலமாக வங்கி கணக்கிற்கு ரூ.5000 பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக லூட்புர் ரகுமான் ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு புகார் அளித்தார் அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில் , ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில் ஆய்வாளர் பரந்தாமன், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு நபர்களானவஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் சரவணன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில் புகார் பெறப்பட்ட சிலமணி நேரத்திலேயே எதிரிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாக பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu