போதை மாத்திரைகளை விற்பனை: வட மாநில தம்பதி கைது
போதை மருந்துகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நசீமா பேகம், அழருல் இஸ்லாம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வடமாநில தம்பதி கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொழிற்சாலைகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழகம் மட்டும் இல்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்த அசாம் மாநிலதை சேர்த்த நசிமா பேகம் (22), அழருல் இஸ்லாம் (24) ஆகிய தம்பதியிடமிருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசி, போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுடனான குற்ற சம்பவங்கள் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவது குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், அவர்களது தனிப்பட்ட விபரம் ரகசியமாக வைக்கப்பட்டு, அவர்கள் அளித்த தகவலின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகள் விற்ற வட மாநில தம்பதியினர் கைது செய்யப்பட்டது பரபரப்பையும் மகிழ்ச்சியும் அளித்தது.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் அனைத்து சமூக இளைஞர்களும் சீரழிந்து வருவதும் பலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதும் வாகன விபத்துகளில் சிக்குவதுமாக உள்ளதால் இதனை காவல்துறை தொடர்ந்து வேட்டை நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu