விமான நிலைய திட்டத்தை கைவிட ஜாமபந்தியில் கிராம பொதுமக்கள் மனு

விமான நிலைய திட்டத்தை கைவிட ஜாமபந்தியில் கிராம பொதுமக்கள் மனு
X

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று துவங்கி வரும் 26ந் தேதி வரை நடைபெறுகிறது.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை மாநில அரசு கைவிடக் கோரி இன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் கிராம மக்கள் கூட்டமைப்பு குழுவினர் மனு அளித்தனர்.

அம்மனுவில், மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்காக 13 கிராமங்களை உள்ளடக்கிய நஞ்சை, புஞ்சை மற்றும் பல்வேறு நீர்நிலைகள் என சுமார் 4750 ஏக்கர் கையப்படுத்தப்பட உள்ள நிலையில், ஏகனாபுரம் ஊராட்சி முழுவதுமாய் அழிக்கப்படும் நிலையில், கிராம பொதுமக்களால் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இதுநாள் வரை 292 நாட்களாக போராடி வரும் சூழலில் இரண்டு முறை போராட்ட குழுவுடன் மரியாதைக்குரிய அமைச்சர் பெருமக்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், அரசு திட்டத்தை கைவிட மறுத்து அமைதி காப்பது விவசாய பெருமக்களை அதிகப்படியான மனக் கவலையை உருவாக்குகிறது.

பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு போராட்டங்களின் போதும், பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற முடியாத கள சூழ்நிலைகளான கீழ்கண்ட காரணிகளை பலமுறை அரசிடம் தெரிவித்தும், எந்த பயனும் இல்லாததது சுய பொருளாதாரத்தோடும், மானத்தோடும், பண்பாடோடும், கலாச்சாரத்தோடும் வாழும் பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்ல பதில் கிடைக்காதது வருத்தம் அளிக்கும் நிகழ்வாக உள்ளது.

திட்டம் செயல்படுத்த முடியாத பல சூழல்களாக விவசாய பெருமக்களாகிய நாங்கள் அரசிடம் தெரிவிப்பது யாதெனில்,

1. பாலாற்று அணைக்கட்டிலிருந்து துவங்கி திருப்பெரும்புதூர் ஏரியை அடையும் வகையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பல்லவ மன்னன் கம்பவர்மனால் தோற்றுவிக்கப்பட்டு இன்றளவும் தனது உபரி நீரால் 85 ஏரிகளை நிரப்பி வேளாண்மையை செழிக்கவைத்து, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து கொண்டு வரும் கம்பன் கால்வாய் சுமார் 7 கி.மீ. பசுமை விமான திட்டத்திற்காக அழிக்கப்படுவது, விவசாயத்திற்கும், நீர்மேலாண்மைக்கும் சுற்றுசூழலுக்கும் உகந்தது அல்ல.

2.அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ராஜாளி என்று அழைக்கப்படும் கடற்படை விமான தளம், பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அமைய உள்ள பகுதியிலிருந்து காற்று தூரம் சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

3. பறவைகளின் சரணாலயமான வேடந்தாங்கல் பகுதிக்கு, ஐரோப்பா கண்டத்திலிருந்து வரும் பறவைகளுக்கு, பரந்தூர் பகுதியே வழித்தடமாக அமைந்துள்ளது என்ற கருத்து பறவியியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளதை புறந்தள்ளுவதற்கு இல்லை.

4. நன்கு விளையும் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் 3500 ஏக்கருடன் நீர் மேலாண்மை பகுதிகளான ஏரிகள், குளங்கள், குட்டைகள் சுமார் 1000 ஏக்கரும் அழிக்கப்படுவது வளமான தமிழகத்திற்கு நல்லது அல்ல.

5. பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தில் அமைகின்ற இரண்டு ஓடு தளம், ஏகனாபுரம் ஊராட்சியில் அடங்கும் களியேரி மற்றும் வயலேரி மீது அமைவது வியப்பாக உள்ளது.

6. பரந்தூர் ஏரியின் கலங்கள் பகுதியிலிருந்து துவங்கும் நீரோடை பல்வேறு கிராம ஏரிகளின் கலங்கள் நீரையும் சுமந்து கொண்டு செல்லும் ஓடையானது கொசஸ்தலை ஆற்றை அடையும் வகையில் அமைந்துள்ள நீர் மேலாண்மை பகுதி திட்டத்தினுடைய கட்டிடங்களால் தடுக்கப்பட்டால், தடுப்பணைப்போல் உருவாகி சுமார் 25க்கு மேற்பட்ட கிராமங்களை மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீரால் அழித்துவிடும் சூழல் நிலவுகிறது என்ற கருத்து உண்மையானது. மேலும், இந்த ஓடையானது திட்டத்தில் அமைய உள்ள இரண்டு ஓடு தளங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

7. சுமார் 1000 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு மிக்கதாகவும், வரும் கல்வி ஆண்டில் 100வது ஆண்டை கொண்டாட உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியை தன்னகத்தே கொண்ட பல்வேறு கலாச்சார பண்பாடு சூழல் நிலவும், தற்சார்பு பொருளாதரத்தோடு வாழும் பட்டியலினம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒற்றுமையுடன் வாழும் தமிழகத்திலே சிறந்து விளங்கும் சமத்துவபுர கிராமமான ஏகனாபுரம் கிராமம் முழுவதுமாக அழிக்கப்படுவது ஏற்புடையது அல்ல.

மேற்கண்ட காரணிகளை கருத்தில் கொண்டு பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என அம்மனுவில் கூறபட்டுள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare